Friday, February 27, 2009

ஓஷோ




ஓஷோவின் சிறப்புகள் இவைதான்:

1. ஞானமடைய புதுப் பாதை
2. ஞான அனுபவம் பெற புது தியான முறைகள்
3. மனித குலத்தில் முதன்முறையாக ஞானம் பெற்றபின் உள்ள வாழ்வு, வாழ்வியல் பற்றிய அனுபவபகிர்வு.


இப்போது ஓன்றின் பின் ஓன்றாக பகிர்ந்து கெர்ள்கிறேன்.

1.ஞானமடைய புதிய பாதை.

ஆதியில் யோகா, தந்த்ரா என்ற இரண்டு வழிகள் இருந்தன. யோகா புலனடக்க வழி. புலன்களே ஓருவனின் உலகம். அதை அடக்கிவிட்டால், அவை இறந்தபின் எஞ்சியிருப்பது எது? எந்த உணர்வு? பயிற்சி மூலம் புலன்கள் இறந்தாலும் உணர்வு எஞ்சி இருந்து பெறும் அனுபவம் இது.

தந்த்ரா என்பது ஏதாவது ஓரு புலனை பயன்படுத்தி ஏதாவது ஓரு குறிப்பிட்ட உணர்வை கூர்மைப்படுத்திக்கெண்டே போய், அதன் மூலம் வெறும் உண்ர்வாய், உடல் தாண்டி, புலன்கள் தாண்டியுள்ள உணர்வு நிலை அனுபவம் பெறுவது இது.

இவை இரண்டும் ஓரு குறிப்பிட்ட எல்லை வரை ஓன்றுக்கு ஓன்று எதிரானவை. அதன்பின், மன எல்லை கடந்த அனுபவத்திற்க்குப்பின், ஓருவனுக்கு எல்லாம் ஓன்றுதான்.

மூன்றாவதாக இருந்தது ‘சரணாகதி’ வழி. அன்புணர்வில் இடையறாது திளைக்கும் ஓருவன் அந்த உணர்வில் மூழ்கிப்போய் மெய்யுணர்வு பெறும் அனுபவம் இது.

இதுவே சற்று மாறி ‘ அனுமதித்து விடுதல்’(let go) என்ற வழியாக சீனாவில் பரிமளித்தது. இது இயற்கையிடம் சரணாகதி. இது ஆழ்ந்த அன்புணர்வில் ஏற்படும் சரணாகதிக்கு பதிலாக,ஆழ்ந்த வாழ்வின் புரிதலில், எந்த புலனுணர்விலும் வீழ்ந்துவிடாமல் மெய்யுணர்வை வாழ்வில் பெறும் அனுபவம்.

இப்படியிருந்த காலகட்டத்தில் கெளதம புத்தர் ஓரு புது வழியை காட்டினார். அது சாட்சிபாவம் என்பது. சாட்சிபாவம் என்ற ஓருகுணம் எந்த மாறுபட்ட நிலையிலும் அழியாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்த கெளதம புத்தர், அதையே ஓரு வழியாக்கினார்.

இப்போதே, மனிதனின் இன்றைய நிலையிலேயே சாட்சிபாவம் அவனிடம் இருக்கிறது. எனவே அதை அதிகரித்து, அதில் அவன் மையம் பெற முயல வேண்டும். அந்த சாட்சிபாவ அனுபவம் அவனுக்கு புலன், மனம் தாண்டிய அனுபவத்தை தரும்.

ஆனால் இதற்கு முன் கூறிய முறைகளைப் போல அல்லாமல் இதற்காக உலகத்தை துறந்து இந்த முயற்சியிலேயே 24 மணி நேரமும் ஈடுபட வேண்டும் என்றார். உலக வாழ்வில் எந்த பயனும் இல்லை என்றார். அதனால் சந்நியாச முறை பிறந்தது.

இப்போது 2500 வருடங்களாக அதுவே ஏதோ ஓரு விதத்தில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்களை ஆட்சி செலுத்தி வந்தது. ஆனால் இதனால் சமூகமும், வாழ்க்கைதரமும், புலன்களும், உடலும் புறக்கணிக்கப்பட்டது. கெளதம புத்தர் அரச வாழ்வு வாழ்ந்து அதன் வெறுமையை உணர்ந்து துறவு பூண்டவர். ஆனால் பின்னாட்களில் மக்கள் ஏராளமான ஆசைகளுடன் துறவு பூண்டனர். மக்களை ஏமாற்றி சுக வாழ்க்கை வாழும் தெர்ழிலாகிவிட்டது அது. ஆகவே அந்த துறவிகளால் ஓழுக்கக்கேடும், மன அழுத்தமும், போலித்தனமும் மூட நம்பிக்கையும் நிறைந்த சமூகம் உருவாகி விட்டது.

இந்நிலையில் ஓஷோ மனிதனின் அறிவு வளர்ச்சியை, மனதின் பெருக்கத்தை, அதன் குதிரை வேகத்தை, அவனது அமுக்கிவைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகளை, அவனது கட்டுப்பெட்டித்தனமான போலி முகத்தை, அவனது குற்றவுணர்வுப் புழுக்கத்தை, உணர்விழந்த உடலைப் பார்த்து, ஆராய்ந்து ஓரு புதிய பாதையை கூறுகிறார். அதுதான் “ REJOICE”, “ZORBA THE BUDDHA” . அதாவது “மனமற்று அனுபவி, “ “ஜோர்புத்தா” ..

வாழ்வை புறக்கணிக்காதே, வாழ்ந்து பார்த்து உதிர்வது வேறு., அப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இந்த உலகமும் ஆன்மீக உலகமும் எதிரெதிரானதல்ல. இந்த உடலே புத்தர், இந்த பூமியே செர்ர்க்கம் என்று முழங்கினார். ஆகவே அவரது புதிய பாதை எது என்றால் யோகா, தந்த்ரா, சரணாகதி, சாட்சிபாவப் பயிற்சி இப்படி எந்த முறையை கடைபிடித்தாலும் சரி, புது முறைகளைக் கடைப்பிடித்தாலும் சரி, உண்மையில் உனக்கான முறையை நீயேதான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.. உனது வாழ்வில் நீ சமநிலை தவறாமல் செல்ல வேண்டும். ஓன்றை புறக்கணித்து மற்றதை நாடக் கூடாது. ஓன்றை தாழ்த்தி ஓன்றை உயர்த்தக் கூடாது. நீ முழு மனிதனாக, இயற்கையை முற்றிலும் ஏற்று, இயற்கையின் ஓரு பாகமாகவே முன்னேற வேண்டும். உலகில் எதுவும் எதிரெதிரானவை அல்ல. ஓன்றுக்கு ஓன்று உதவியாக உள்ளவைகளே. நீரும் நெருப்பும் பகையல்ல, சமநிலை காக்க உதவி செய்பவைகளே. வேரும் கிளையும் எதிரெதிர் நோக்கம் உள்ளவை அல்ல. எனவே ஓவ்வோர் மனிதனும் தனது தனி தன்மைப்படி பயணப் பட வேண்டும். அதே சமயம் வாழ்வின், உடலின், உலகத்தின் அங்கம் நான் என்ற உணர்வின் அடிப்படையில் எல்லா பரிமாணங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்போதுதான் செர்ர்க்கமான உலகு பிறக்கும்.

மேலும் இந்த அவரது பாதையில், கடந்த காலத்தின் இறுக்கத்திற்கும், கவலைக்கும் இடம் இல்லை, மாறாக நேர்மையான அதேசமயம் சீரியஸ் இல்லாத சிரிப்போடு கூடிய பாதை அவருடையது.

ஆன்மீகம் இல்லாத உலகு திசை தெரியாத பயணம். உலகியல் இல்லாத ஆன்மீகம் பாலைவனத் தேடல். ஆனால் ஓஷோ கூறும் புதிய மனிதனின் புது வாழ்க்கை முறை ஜோர்புத்தா. ஜோராக உலகை மனமற்று அனுபவித்தவாறே புத்த நிலை நோக்கி செல்லும் பயணம்.

சரி., மற்ற இரண்டும் பற்றி அடுத்த மாத தலையங்கத்தில் பார்ப்போம்.
அன்பு,
சித்.


அன்பின் திமைகள்

அன்பில் குருடனாகிறான்,
ஆம்......அன்பு புறம் சார்ந்ததில்லை,

அன்பில் விழுகிறான்,
ஆம்......அன்பு உன்னைவிடப் பெரிது,

அன்பில் பைத்தியமாகிறான்,
ஆம்......அன்பு கணக்கிடும் உலகம் கடந்தது,

அன்பில் வேதனைப்படுகிறான்,
ஆம்......அன்பு உன்னை புடம் போடுகிறது,

அன்பில் அடிமையாகிறான்,
ஆம்...... அன்பே எஜமானன் என்றுணர்ந்ததன் விளைவு,

அன்பில் அழிகிறான்,
ஆம்......சுவைத்தவன் விரும்பிச் செய்து கொள்வது இது.

கேள்விப் பகுதி

இம்மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி “ஓழுக்கம் பற்றி ஓஷோ கருத்து என்ன?” : ஓழுக்கம் பற்றிய 3 கேள்விகளுக்கு ஓஷோ பதில்கள்

1. ஓழுக்கம் என்றால் என்ன ?

மதம் சிதைந்து போனால் அது எப்போதும் ஓழுக்கமாகமாறிவிடுகிறது. ஓழுக்கம் என்பது இறந்து போன மதம். மதம் என்பது உயிரோட்டமுள்ள ஓழுக்கம். அவை சந்திப்பதேயில்லை, அவை சந்திக்க இயலாது. ஏனெனில் வாழ்வும் மரணமும் சந்திப்பதேயில்லை, இருளும் ஓளியும் சந்திப்பதேயில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை ஓன்று போலவே தோற்றமளிக்கின்றன. வாழும் மனிதனை போலவே இறந்த பிணமும் காட்சியளிக்கிறது. அதே முகம், அதே கண்கள், அதே மூக்கு, மயிர்கள், உடம்பு எல்லாம் அவன் உயிரோடு இருந்தபோது இருந்ததை போலவே இருக்கின்றன. ஓன்றே ஓன்றுதான் இல்லை, அந்த ஓன்றை பார்க்க இயலாது. உயிரோட்டம் இல்லை, ஆனால் உயிரோட்டத்தை தொடவோ,
பார்க்கவோ முடியாது. எனவே இறந்துபோன ஓரு மனிதன், இன்னும் அவன் உயிரோடு இருப்பதை போலவே காட்சியளிக்கிறான். ஓழுக்கத்தை பற்றிய விஷயத்தில் அது இன்னும் சிக்கலானது.

ஓழுக்கம் மதத்தைப் போலவே காட்சியளிக்கிறது, ஆனால் அது அப்படி அல்ல. அது ஓரு பிணம். மதம் இளமையானது, புத்துணர்வு மிக்கது. மதம் மலர்களின் புத்துணர்வையும், காலைப் பனித்துளியின் புத்துணர்வையும் கொண்டது. மதம் ஓரு வசந்தம், நட்சத்திரங்களின் வசந்தம், வாழ்வின் வசந்தம், பிரபஞ்சத்தின் வசந்தம். மதம் உள்ளபோது ஓழுக்கம் இருப்பதில்லை, அவனது இயல்பே ஓழுக்கமாக இருக்கிறது. ஆனால் அங்கு ஓழுக்கம் என்ற ஓன்று தனியாக இருப்பதில்லை, ஓழுக்கம் என்றால் என்ன என்ற கருத்தும் இருப்பதில்லை. அது அவனது இயல்பாகவே உள்ளது, உன்னுடைய நிழல் உன்னை தொடர்வதை போல அது உன்னை தொடர்கிறது. நீ உன்னுடைய நிழலை சுமக்க வேண்டியதில்லை. நீ உன்னுடைய நிழலைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. உன்னுடைய நிழல் உன்னை தொடர்கிறதா இல்லையா என நீ திரும்பி திரும்பி பார்க்க வேண்டியதில்லை. அது உன்னை பின்தொடரும்.

அதைப்போலவே, ஓழுக்கம் மதத்தன்மை வாய்ந்த மனிதனை பின்தொடர்கிறது. அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை, அவன் அதைப் பற்றி நினைப்பதில்லை, அது அவனது இயல்பான குணம். ஆனால் மதம் இறந்தபிறகு, உயிரோட்டம் மறைந்த பிறகு, ஓருவன் ஓழுக்கத்தைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க தொடங்குகிறான். விழிப்புணர்வு மறைந்துவிட்டது, அது குறித்த சிந்தனை மட்டுமே அவன் ஓதுங்குமிடமாக மீதமுள்ளது.

இரண்டாவதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓழுக்கவாதி பல காரணங்களுக்காக எப்போதும் தனது ஓழுக்கத்தை பிறர்மீது திணிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். முதலாவது தனது ஓழுக்கத்தை அவன் தன்மீது அதிகாரம் செலுத்த உபயோகப்படுத்துகிறான். இயல்பாக மற்றவரிடத்திலும் அவன் அதையே செய்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்துகிறான். அவன் ஓழுக்கத்தை தனது சொந்த லாபங்களுக்காக பயன்படுத்த தொடங்குகிறான். இயல்பாக அவன் இந்த தந்திரத்தைக் கற்றுக்கொள்கிறான். அவன் தனது ஓழுக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கமுடிந்தால் பிறகு செயல்கள் எளிமையாகிவிடும். எடுத்துகாட்டாக, ஓழுக்கவாதி உண்மையை பேசினால், அவனுடைய உண்மை ஆழமானதல்ல, அடி ஆழத்தில் பொய்கள், பொய்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சமுதாயத்திலாவது அவன் உண்மை பேசுவதைப் போல நடிக்கிறான். அவன் மற்றவர்களிடமும் அவனுடைய உண்மையை திணிக்க முயல்வான். அவன் மற்றவர்கள் அனைவரும் உண்மையை பேச வேண்டும் என விரும்புவான். ஏனெனில் அவன் தன்னை யாராவது பொய் சொல்லி, குறுக்கு வழியில்,ஏமாற்றிவிடுவார்களோ என மிகவும் பயந்துகொண்டிருப்பான்......அவன் நாம் சாதுரியமான வார்த்தைகளால் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவான். ஆனால் மேலோட்டத்தில் அவன் உண்மையை காப்பாற்றுகிறான். அவன் எல்லோரும் உண்மையாக இருக்கவேண்டும் என கத்திக் கொண்டேயிருக்கிறான் அவன் மிகவும் பயந்திருக்கிறான். அவன் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல மற்றவர்களும் அவனை ஏமாற்றலாம் என அவனுக்குத் தெரியும்.

மூலம் :I SAY UNTO YOU – VOL # 2 – CHAPTER # 1

2. ஓழுக்கம் என்பது சமுதாய பயன்பாடு என நீங்கள்
கூறுகிறீர்கள். அப்படி என்றால் தனிமனிதனுக்கு அது பயனற்றதா?

ஓழுக்கம் அல்லது ஓழுக்கமான பழக்கவழக்கம் என்பது சமுதாயத்தைப் பொறுத்தவரை வெறும் பயன்பாடு மட்டுமே. ஆனால் தனிமனிதனுக்கு அது பயன்பாடல்ல, அது ஓரு ஆனந்தம். ஆதலினால், சமுதாயத்தின் தேவைகளை போலித்தனமான ஓழுக்கத்தால் கூட திருப்திப்படுத்திவிடமுடியும்.
ஆனால் தனிமனிதனைப் பொறுத்தவரை அது போதாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் போதும் ஆனால் உன்னைப் பொறுத்தவரை அது போதாது. நீ கண்டிப்பாக இதைப் பார்க்க இயலும் — நீ உனக்குள்ளே நன்றாக இருக்கிறாயோ இல்லையோ. சமுதாயம் உனது சமூக முகத்தை குறித்தே கவலை கொள்கிறது, உன்னுடைய உள்ளிருப்பை பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் உனக்கு சமூக முகம் ஆடையை போன்றதே. அது எங்கு முடிகிறதோ அங்கிருந்துதான் நீ தொடங்குகிறாய். சமூக முகம் என்ற இந்த முகமூடியிலிருந்து தனித்தும் அதற்கு பின்னும் உள்ளதே உனது உண்மையான இருப்பு. அங்குதான் ஓழுக்கம் பிறக்கிறது.

பொய்யான ஓழுக்கத்தின் மூலம் உருவான சமுதாயம் நாகரீகம் என அழைக்கப்படுகிறது. வாழ்வின் உண்மையை அடைந்த மனிதர்களை கொண்ட சமுதாயம் பண்பாடானது என அழைக்கப்படுகிறது. இதுதான் நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு. நாகரீகம் என்பது ஓரு பயன்பாடு, பண்பாடு என்பது உள் ஓத்திசைவு மற்றும் ஆனந்தம்.

இன்று நம்மிடம் நாகரீகம் உள்ளது ஆனால் பண்பாடு இல்லை. இருந்தாலும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த பண்பாட்டை உருவாக்க முடியும். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை தூய்மைபடுத்துவதால் நாகரீகம் வருகிறது. பண்பாடு நம்மை தூய்மைபடுத்திகொள்வதன் மூலம் நம்மை புரிந்துகெரள்வதால் வருகிறது. நாகரீகம் என்பது உடல், பண்பாடு என்பது இருப்பு. தன் இருப்பில் ஆழமாக வேரூன்றி இருப்பவர்கள் மட்டுமே ஓரு பண்பாட்டை உருவாக்கமுடியும்.

மூலம் : THE PERFECT WAY – CHAPTER # 5

3. காமத்தைப் பொறுத்தவரை ஓழுக்கத்தின் எதிர்காலம் என்ன?

காமத்தைப் பொறுத்தவரை எந்த ஓழுக்கத்திற்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் ஓழுக்கத்தையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் ஓழுக்கத்தின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. ஓழுக்கம் அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. ஓழுக்க சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.

உண்மை, நேர்மை, சுயப்பெரறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் காமமும் ஓழுக்கமும் கிட்டதட்ட ஓரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது ஓழுக்கமற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய். நீ மிக ஓழுக்கமானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய். ஓழுக்கம் ஓற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த ஓழுக்கத்திற்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஓரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.

கடந்த காலத்தில் இருந்ததைப்போல இறுக்கமான விஷயமாக இல்லாமல் காமம் மேலும் விளையாட்டுத்தன்மை கொண்ட விஷயமாக மாறவேண்டும். அது ஓரு விளையாட்டை விளையாடுவதைப் போல விளையாட்டாக இருக்கவேண்டும். இரண்டு மனிதர்கள் ஓருவர் இன்னொருவரின் உடல் சக்தியோடு விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் மகிழ்வாக இருந்தால், யாரும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர்கள் ஓருவர் மற்றொருவரின் சக்தியில் ஆனந்தம் கொள்கிறார்கள். இரு சக்திகள் இணைந்து ஆடும் ஓரு நடனம் அது. சமூகத்தைப் பொறுத்தவரை அது ஓரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. ஓருவர் மற்றொருவரின் வாழ்வில் குறுக்கிட்டால், ஓருவன் தன்னை மற்றவர் வாழ்வில் கட்டாயபடுத்தி திணித்தால், மற்றவரின் வாழ்வை கெடுத்தால் அப்போது மட்டுமே சமுதாயம் உள்ளே வரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. அது ஓரு பொருட்டாக இருக்ககூடாது.

எதிர்காலம் காமத்தை குறித்து ஓரு முற்றிலும் வேறுபட்ட பார்வையை கொண்டிருக்கும். அது அதிக விளையாட்டாகவும், அதிக மகிழ்ச்சியுடனும், அதிக நட்போடும் கடந்த காலத்தைப் போல் இறுக்கமான விஷயமாக இல்லாமல் விளையாட்டாகவும் இருக்கும். அது மக்களின் வாழ்வை அழித்துள்ளது. தேவையில்லாமல் அவர்களை அதிக சுமை கொண்டவர்களாக ஆக்கியுள்ளது. அது காரணமேயில்லாமல் அளவுக்கதிகமான பொறாமையையும், பிடிப்பையும், ஆளுமையையும், நச்சரித்தலையும், சண்டையிடுதலையும், குறை கூறுதலையும், உருவாக்கியுள்ளது.

காமம் உடலைச் சார்ந்த ஓரு சாதாரண விஷயம், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அதன் ஓரே முக்கியத்துவம் அந்த சக்தியினை உயர்ந்த தளங்களுக்கு மாற்றமுடியும் என்பதே. அது மேலும் மேலும் ஆன்மீகமாக மாறமுடியும். அதை மேலும் மேலும் ஆன்மீகமாக மாற்றும் வழி அதன் இறுக்கத்தை குறைத்து தளர்த்துவதே.

டாக்டர் பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பெண்ணை அவர் எல்லா பரிசோதனையும் செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்
முடிவுகள் ஓரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன. முடிவில் அவர்
“ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக தெரியவில்லை” என
ஓப்புகொண்டார்.

“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ கர்ப்பமாக இருக்கிறாய்”
என அவர் கூறினார்.

அதற்கு அவள்,
“நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாது” என கூறினாள்.

இதுதான் எதிர்காலம்.

மூலம் : : AH THIS! – CHAPTER # 8

உறங்கும் மனிதன் - ஓஷோவின் கதை - 3

நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஓரு மனிதனைப் பற்றிய கதை.

அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.

உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஓதுக்க முடியும்? -- அது நீ.

நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.

அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு
சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது.

அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஓருமுறை ஓரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான்.

அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான்.

நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்!

நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்.

ஓருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான்.

தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஓதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஓதுக்குவதற்கான மனதின் ஓரு சாதுரியம்.

அவன் எழுந்தபோது அவன் ஓரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது

சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில்
வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கெர்ள்ளப்படவேண்டிய ஓன்றுதான்.

ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஓரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஜந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான்.

திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய்.

நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஓரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான்.

இது ஓருநாள் இல்லை ஓருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஓவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது.
வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது.

நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஓரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்?
மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான்.

மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கெர்ண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய்.

எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்?
இந்த வார்த்தைகளை கூரியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஓன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஓருவேளை என்னுடைய மனைவி.... மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து
போக விட்டுவிட்டேன்?

நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான்.

இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.

Monday, February 23, 2009

விழித்திரு பாதை தெரியும்


பிரக்ஞையாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்
பிரக்ஞை (awareness) யாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்
பிரக்ஞையாக இரு என்பது தான்
ஓசோவின் பிரதான கற்பித்தல்.
அதாவது காலை எழுதலிலிருந்து
இரவு நித்திரைக்குச் செல்லும் வரை மட்டுமல்ல
நித்திரை கொள்ளும் பொழுதும்
பிரக்ஞையாக இரு.
இது நமக்கு பல வழிகளில்
உதவிபுரிகின்றது எனக் கூறுகின்றார்.
நமது செயற்பாடுகள், சிந்தனைகள், எண்ணங்கள், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள்
என்பவை தொடர்பாக
நாம் பிரக்ஞையாக இருப்போமானால்
அவற்றினால் உருவாகும் பாதிப்புகளிலிருந்து ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது
இவரது அனுபவம். இது இவரது மட்டுமல்ல
இப் பாதையில் பயணித்த பலரது அனுபவம்.

நம் பிரக்ஞையற்ற செயற்பாடுகளின்
விளைவுகளையே விதி எனவும்,
முற்பிறவியின் பயன் எனவும் கூறுகின்றோம்.

பிரக்ஞையற்ற செயற்பாடுகள்
ஒரு எதிர் செயற்பாடக (reaction) இருக்கின்றன.
இவ்வகையான எதிர் செயற்பாடுகள்
முடிவற்ற தொடர்ச்சியைக் கொண்டிருக்கும்.
இதனால் தான் நேற்று அல்லது கடந்த வருடம் அல்லது கடந்த பிறவியில்(?)
நாம் முன்னெடுத்த பிரக்ஞையற்ற செயற்பாடுகளின் விளைவுகளை இன்றும் நாம் எதிர்கொள்கின்றோம். இன்றைய பிரக்ஞையற்ற செயற்பாடுகளின்
எதிர் விளைவுகளை அடுத்த நிமிடம்
அல்லது நாளை அல்லது அடுத்த வருடம்
நாம் எதிர்நோக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரக்ஞையான செயற்பாட்டை
எவ்வாறு மேற்கொள்வது?
இதற்கு முதலில், நாம் பிரக்ஞையற்று எவ்வாறு வாழ்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நாம் ஒரு இயந்திரமாக வாழ்கின்றோம் என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. நம் நாளாந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இயந்திரத்தனமானவை. நம் உடலின் பகுதிகள் வேவ்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அதேவேளை மனம் இன்னுமொரு செயற்பாட்டைக் மேற்கொள்ளும். உதாரணமாக உணவை உட்கொள்ளும் பொழுது ஒரு கை உணவை எடுக்கும். மறு கை உடலைச் சோறியும். கால்கள் ஆடும். மனம் வேலை தொடர்பாக அல்லது காதலன் அல்லது காதலி தொடர்பாக சிந்திக்கும். இதயம் வேறு ஒரு பாதிப்பினாலோ அல்லது சந்தோசத்தினாலோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும்.
இவ்வாறு நம் உடல், மனம், ஆன்மா
அனைத்தும் பிரிந்து (split) ஒரு நேரத்தில்
பல வேலைகளில் பல முனைகள் நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இம் மூன்றும் இணைந்த ஒருங்கினைந்த
முழுமையான (total) செயற்பாட்டை
நாம் முன்னெடுப்பது மிகவும் அரிது.
கலைஞர்களின் படைப்புக்கள் சிறப்பாக இருப்பதற்கு
இவர்களது ஒருமித்த முழுமையான
பிரக்ஞையான செயற்பாடே காரணம்.

மிகச் சில அரிதான நேரங்களில்
இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.
புதிய வேலைகளை செய்யும் பொழுது
இந்த முழுமையான ஈடுபாடு உருவாகும். உதாரணமாக முதன் முதலாக கார் பழகும் பொழுது நம் ஒவ்வொரு அசைவுகள் தொடர்பாகவும் பிரக்ஞையாக இருப்போம்.
கை என்ன செய்கின்றது, கால் என்ன செய்கின்றது, நம் பார்வை என ஒவ்வொரு சிறிய விடயங்களிலும் நமது அவதானம் இருக்கும்.
பிரக்ஞை இருக்கும்.
ஆனால் கார் நன்றாக பழகிய பின் எந்தவிதமான அவதானமோ பிரக்ஞையோ இன்றி
இவ் ஒவ்வொரு செயற்பாடுகளையும் இயந்திரத்தனமாக முன்னெடுப்போம்.
பழக்கப்பட்ட வீட்டு மாடுகள் போல்.
மனிதருக்கும் மிருகங்களுக்கும்
இடையிலான வேறுபாடுதான்
இந்த பிரக்ஞை.

பிரக்ஞையான செயற்பாட்டிற்கு
பிரதானமான எதிரி
பிரக்ஞையற்ற மனம்.
மிருக நிலை என்பது நூறு வீதம்
பிரக்ஞையற்ற (unconscious) செயற்பாடு.
நாம் இன்று மிருக நிலையிலிருந்து
ஒரு வீதமே மனித நிலையை அடைந்திருக்கின்றோம்.
சாதாரணமாக மனிதர்கள்ஒரு வீதம்;.
பிரக்ஞையாகவும் (conscious)
தொன்னூற்றி ஒன்பது வீதம்
பிரக்ஞையற்றும் (unconscious) செயற்படுகின்றனர்.
தியானம் மூலம் படிப்படியாக
இதிலிருந்து முன்னேறி நூறு வீதம்
பிரக்ஞையாக (conscious) செயற்படும்போதே
மனித பரிணாமவளர்ச்சி நடைபெறுகின்றது என்கின்றனர். மனிதரின் பரிணாமவளர்ச்சி தற்பொழுது முடங்கிப்போய்யுள்ளது எனக் கூறினால் மிகையாகாது. நூறுவீதம் பிரக்ஞையாக (conscious) செயற்படும் பொழுதே அடுத்த நிலையான
பிரக்ஞை (awareness) நிலைக்கு
மானுடம் செல்லமுடியும்.
இவர்களையே ஞானிகள் எனக் கூறுகின்றோம்.
பிரக்ஞை எனும் சாவியைக் கொண்டு
நம்மை அறிந்து கொள்வதை மட்டுமல்ல
இவ்வுலக பிரபஞ்ச உண்மையை அறிந்த கொள்ளவும் திறக்க முடியும் என ஓசோ மட்டுமல்ல அக்காலத்திலிருந்து பைதகரஸ், புத்தர், சோக்கிரட்டிஸ், லாவுஸ், சரசுத்ரா, இயேசு, நபி என இன்றுவரை உண்மையைக் கண்டறிந்த
பலர் கூறுகின்றனர்.

இது மனிதரால் முடியாத கடினமான காரியமல்ல. எல்லா விடயங்களும் முதல்; அடி எடுத்து வைப்பதன் மூலமே ஆரம்பமாகின்றது.
தியான வழி முறைகள்
நம் பிரக்ஞையான செயற்பாட்டிற்கு
நம்மை தயார் செய்கின்றன.
நம் உடலை, மனதை, ஆன்மாவை சுத்தம் செய்வது பிரக்ஞையான செயற்பாட்டுக்கு வழிவகுக்கின்றது.

பிரக்ஞையான (awareness) செயற்பாடு என்பது எப்பொழுதும் முழுமையானதாகவும் (totalness) பொறுப்பான செயற்பாடாகவும் (response, action) விழிப்பானதாகவும் (alert) இருக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள்,
இக் கனமே முழுமை பெற்றுவிடும்.
இதனால் எதிர்காலத்ததில் விதியின் பயனை அனுபவிப்பதிலிருந்து விடுலை பெறலாம்.
இதற்கு இக் கணத்திலிருந்தே பிரக்ஞையாக செயற்பட வேண்டியது அவசியமல்லவா.?

நாம் இன்று எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்கு அடிப்படை
நம் கடந்தகால செயற்பாடுகள். ஆகவே
பிரக்ஞையான செயற்பாடுகள் (actions) அவசியம்.
நம் செயற்பாடுகளுக்கு அடிப்படை
நம் சிந்தனைகள் எண்ணங்கள். ஆகவே
பிரக்ஞையான எண்ணங்கள் (thoughts) அவசியம்
நம் எண்ணங்களுக்கு அடிப்படை
நம் உணர்வுகள். ஆகவே
பிரக்ஞையான உணர்வுகள் (feelings) அவசியம்
நம் உணர்வுகளுக்கு அடிப்படை
நம் சக்திகள். ஆகவே
சக்திகள்; (energy) தொடர்பான பிரக்ஞை அவசியம்
நமக்கு சக்திகள் வழங்குவது
நம் மூச்சு. ஆகவே
மூச்சு (breathing) தொடர்பான பிரக்ஞை அவசியம்.

பிரக்ஞை நம் வாழ்வின் அடிப்படை.
இதனை பயன்படுத்தாததால் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்பதையும்,
நம் நாளாந்த வாழ்க்கையில்
எவ்வாறு இதனைப் பயன்படுத்;தி
நம் வாழ்வை ஆனந்தமயப்படுத்துவது
என இனிப் பார்ப்போம்…

பிரங்க்ஞை தொடர்பாக மேலதிகமாக அறிவதற்கு ஓசோவின் புத்தகங்களை வாசியுங்கள். அத்துடன் நின்றுவிடாதீர்கள் தியானம் செய்யுங்கள் அனுபவத்தில் அறிவதற்கு.



Monday, February 16, 2009

ஆச்ட்டங்கயோகம்

யோக நிலையை அடைய, சமாதி நிலையை அடைய, 8 அங்கங்களான,
இயம,
நியம,
ஆசன,
பிராணாயாம,
பிரத்தியாகார,
தாரண,
தியான,
சமாதி
எனப்படும் 8 படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும். நன்றாக செப்பனிடப்பட்ட ராஜ பாட்டை போல நிச்சயமான வெற்றியைத் தர வழிகளை உடையதாக இருப்பதால் 'ராஜயோகம்' என்றும் இதற்குப் பெயருண்டு.
இதை பஹிர்முகம், அந்தர்முகம் என இரண்டாகப் பிரித்து சொல்லுவர். பஹிர்முகமாவது வெளி நோக்கிய உடலாலியற்றப்படும் ஆசனம், பிராணாயாமம், இயமம், நியமம் முதலியன. சிலர் இதில் பிரத்யாஹாரத்தையும் சேர்ப்பர்.
அந்தர்முகமாவது, பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதியாகும்; இவை மனத்தால் இயற்றப்படுபவையாகும்.
பஹிர்முகமான யோகப் படிகளை மட்டும் ஹடயோகம், கிரியாயோகம் என்றும் சொல்லுவதுண்டு.
கிரியா யோகாவில், முத்திரைகள், பந்தங்களுடன் குண்டலினிச் சக்தியைக் கிளப்பி 'வர்ண மாலாக்கள்' எனப்படும் அட்சர ஜபத்தால் செய்யப்படுவதை 'குண்டலினி யோகம்' என்பார்கள்.
தந்திர யோகம் எனப்படுவதிலும் முக்கியமாக ஆசனம், பிராணாயமம், யோக ஆதாரங்கள் முதலியவைகளை பிற சடங்குகளுடன் வைத்துக் கொண்டுள்ளனர்.
கரும யோகமானாலும், பக்தி யோகமானாலும், ஞான யோகமானாலும், ராஜ யோகம் எனப்படும் இந்த அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ளவை வேறு வேறு விதமாய் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதால் இதன் சிறப்பு விளங்கும்.
மேலும் சாங்கிய மதத்தில் இறுதி நிலையை அடைய கூறப்பட்ட வழிகளும் யோக வழியும் ஒன்றே! ஆனால், 'தத்துவம்' என்று நோக்கும் போது சாங்கியத்தையே யோகம் எதிர்பார்த்து நிற்கிறது. வேதாந்த மதங்களும் கூடத்தான்.
சுருக்கமாக கூறவேண்டுமானால், சாங்கியமும், யோகமும் ஒன்றே; யோகத்தில் "புருஷ விசேஷஹா" என்று ஈஸ்வரன் கூறப்படாமலிருந்தால்!