தியானமும் பஞ்சகோசங்களும்.
இப்பூவுலக வாழ்வில் ஒருமனிதன் பலவிதமான செயல்களில் ஈடுபடுகின்றான். ஓவ்வொரு காரியத்தைச் செய்யும்போதும் அதற்கேற்றமாதிரியான இயல்புநிலைக்குள் அவன் மாறிவிடுகின்றான். ஒரு இராணுவவீரன் தன் உடையில் வேறுவிதமாகத் தோற்றம் அளிப்பதுபோல நடை, உடை, பாவனைகளில் நாம் வேறுவிதமாகத் தோற்றம் அளித்தாலும் உண்மையாக நாம் வேறுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். செய்யும் தொழிலைச் சார்ந்த வேடங்களைக் கண்டு ஒருவித மயக்க நிலைக்குள் நாம் செல்வதுண்டு. இது தவறான ஒரு எண்ணச் செயற்பாடாகும். வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் பலருக்கு நடிகர் சிவாஜியின் நினைப்பு வருவதுபோல் தோன்றும். இவ்வாறான தோற்றங்கள் நியங்கள் போல் எமக்குக் காட்சியளிக்கும்.
வெளிப்படையாகக் காணக்கூடிய நமது உடம்பிற்குள் நான் என்று குறிப்பிடப்படும் உயிர் இருக்கின்றது. உயிரும் உடலும் சேர்ந்த ஒரு கூட்டு அமைப்புத்தான் நாம் என்பதை தெரிந்கோள்வது அவசியம். உயிரானது ஐந்து வகையான உறைகளைப் போட்டுக்கொண்டு அந்த உறைகளுக்குப் பொருத்தமான செயற்பாட்டைச் செய்து வருகின்றது. இந்த உறைகளின் செயற்பாடுகளையே தத்துவநூலாசிரியர்கள் பஞ்ச கோசங்கள் என்று வகுத்துக் கூறியுள்ளனர்.
அன்னமய கோசம்.
உயிரின் இயக்கத்திற்கு உதவிவருவது இந்த மனிதசரீரமாகும். இந்த சரீரத்தின் வளச்சிக்கும், உயர்ச்சிக்கும் உயிரானது தீவிரமாக அன்னமயகோசத்தில் நின்றே ஈடுபாடு காட்டும் வசதி குறைந்தவர்களின் உயிரானது உணவைத் தேடுவதிலும், ஓவ்வு நேரத்தில் உறங்குவதிலும் கூடுதலாக ஈடுபாடு கொண்டிருக்கும். அவற்றுக்காகவே அவர்கள் கடுமையாக உழகை;கவேண்டியிருப்பதால் வேறு சிந்தனைகளில் மனத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்கு மனம் விருப்பப்படாது. அவர்களுக்கு நேரமும் இருக்காது.
பிராணமய கோசம்
இது அன்னமய கோசத்தைவிடச் சற்று சிறப்பானதாகும். இது உயிர் பிராணமய கோசத்தில் இயங்கும் நிலையாகும். மூச்சு என்ற இந்த இயக்கம் நின்றுவிட்டால் பிராணன் என்றழைக்கப்படும் உயிரும் இல்லையென்றாகிவிடும். இதனால் மூச்சுக் காற்றையும், உயிரையும் முன்னோர்கள் பிராணன் என்று அழைத்தனர். கடுமையான உழைப்பாளிகளுக்கு மூச்சின் இயக்கம் செம்மைப்படுத்தப்பட்டு உடலுக்கு உரம் சேர்க்கிறது. பிராணன் மிகுதியாக உயிரினுள் செயற்படும்போது உடல் தானாகவே பலமடைகின்றது. ஒரு பொருளைத் தூக்க முயற்சிக்கும் ஒருவர் இயலாத கட்டத்தில் மூச்சைப்பிடித்துத் தூக்கி விடுகின்றார். எனவே பிராணன் உயிருக்குள் இருக்கும்போது உடல் வலிமைபெறுகின்றது. உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களும், சோம்பல் மிகுதியாக உள்ளவர்களும் மூச்சுப் பயிற்சி செய்வதனூடாக உடலின் கர்மேந்திரியங்களை வலுப்பெறச் செய்யலாம். உடலின் செயலாற்றலை அதிகரித்துக் கொள்ள விரும்பும் ஒருவருக்கு உயிரானது பிராணமய கோசத்தில் நின்று இயங்கி அவருக்கு உதவுகின்றது.
மனோமய கோசம்.
இந்த நிலையில் நின்று இயங்கும் உயிரின் இயக்கமானது மிகவும் சிறப்பானதாகும். மனமும் இந்திரியங்கள் என்றழைக்கப்படும் புலன்கருவிகளும் சேர்ந்த இயக்கமே மனோமய கோசம் எனப்படும். மனம் நினைக்கும் எண்ணங்களை விருத்தியாக்கி வலிமை சேர்ப்பதற்கு நல்லறிவுகளை மனத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துமாகும். உயிர் இந்தக் கோசத்தில் நின்று செயற்படும்போது எண்ணங்களே வலிமைப்படுத்தப்படுகின்றது. இதில் ஒன்றின் பிணைப்பிலேயே (பரமாத்தா) உயிர் கலந்து ஒன்றும்போது மற்றவை தானாகக் குறையத் தொடங்கிவிடும்.
விஞ்ஞானமய கோசம்
விஞ்ஞானம் என்றால் ஒருவித சிறப்பு நிலையான ஞான நிலையாகும். இந்தக் கோசத்தில் உயிர் செயற்படுமு;போது புத்தியானது மிகவும் கூர்மை அடைந்து வலுப்பெறுகின்றது. புத்தியானது முடிவுகளை ஆராய்ந்து எடுக்கும் வலிமை பெற்றது. ஆராச்சிகளில் கடுமையாக ஈடுபடும் ஒருவர் உலகை மறந்த நிலையில் தன் ஆய்வுகளில் கவனமாக இருப்பாரே அன்றி உலக விடையங்களில் அவருக்கு அதிக நாட்டம் இருக்காது. வரலாற்றில் பல மேதைகள் விஞ்ஞானமய கோசத்தில் நின்று பல விடையங்களை உலகிற்கு அளித்துள்ளார்கள். அறிவின் செயற்பாட்டுடன் உயிர் இரண்டறக் கலந்து இந்தக் கோசத்தை ஆளுமை செய்கின்றது. இதில் புத்தியின் கூர்மை அதிகமாகத் தென்படும்.
ஆனந்தமய கோசம்
ஆனந்தமய கோசத்தில் உயிர் நிற்கும்போதுதான் அது இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றது. நிலையான இன்பம் ஏற்படுவதற்கான வழியில் நின்று பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையே இதுவாகும். இதனையே ஐம்புலன்களும் அடங்கிய நிலை என்று கூறுகின்றனர் ஒவ்வொரு உயிர்களும் அடைய வேண்டிய உயர்ந்த நிலையும் இதுதான். இதனை வழிநடத்துவதற்காகவே பஞ்சகோச இயக்கங்கள் அமைந்துள்ளன. இதனை உணர்ந்து நடக்கும்போது உலகியல் சார்ந்த துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன. மனம் மாசு அற்ற தௌpந்த நிலை என்றும் இதனை குறிப்பிடுவர்.
மனத்தைப் பக்குவப்படுத்தி மனத்தினூடாகவே இந்த வாழ்க்கையில் ஆனந்தத்தைப்பெற முடியும். இந்த ஆனந்த வாழ்வைப் பெறுவதற்கு ஒரே பரம்பொருளில் மனத்தை ஒருமுகப்படுத்துவதே சிறந்த வழியாகும். இப்படி மனத்தை குவித்து ஒருமுகப்படுத்த உதவுவது ஆழ்ந்த தியானமாகும். தியானம் மனத்தைத் தூய்மையாக்கி ஆனந்தமான நித்திய நிலைக்கு உயிர்களை உயர்த்துகிறது இதைப்போல் ஆழ்ந்த தியானமானது விஞ்ஞானமய கோசத்தில் நின்று புத்தியை வலுப்படுத்தி உலக விவகாரங்களில் வெற்றியைத் தருகின்றது. (தொடரும்)

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News